இந்திய மீனவர்கள் 41 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 41 தமிழக மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.8 படகுகளுடன் தமிழக மீனவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணக்குலசூரிய தெரிவித்தார்.
அவர்கள் தற்போது தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படும் எனவும் கடற்படையின் பேச்சாளர் நியூஸ் பெர்ஸ்டுக்கு கூறினார்.
மேலும், இந்திய கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 84 இலங்கை மீனவர்களும் அவர்களின் 17 படகுகளும் இந்தியாவின் பல பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இவர்களை விடுதலை செய்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு தமிழக மீனவர்கள் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பீ. ஜேசுராஜ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் எவருமே தற்போது இலங்கையில் தடுப்புக் காவலில் வைக்கப்படவில்லை என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் லால் டி சில்வா தெரிவித்தார்.



































No Comment to " இந்திய மீனவர்கள் 41 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது "