வரலாற்று ரீதியிலான மீன்பிடித் துறைமுகங்களை மீட்டுத் தருவேன் - அமைச்சர்
எமது மண்ணில் வரலாற்று ரீதியில் நாம் பயன்படுத்தி வந்துள்ள மீன்பிடித்துறைமுகங்களை பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தேவைக்கேற்ப புதிய மீன்பிடித்துறைமுகங்களையும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கும் விசேட கூட்டம் இன்று பிற்பகல் பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலர் திரு.த.ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், இந்திய கடற்றொழிலாளர்களது அத்துமீறிய தொழில் செய்கை காரணமாக எமது மீனவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். இவ்விடயம் தொடர்பில் அண்மையில் இரண்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றும் தீர்வேதும் காணப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் புதிய பிரதமரான மோடி அவர்களின் பதவியேற்பு நிகழ்வுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்திய கடற்றொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட காலம் அவகாசம் தேவை என பிரதமர் மோடியினால் தெரிவிக்கப்பட்டும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அதற்கு இணங்கவில்லை.
அவ்வாறு கால அவகாசம் வழங்கினால் அது இரண்டு தரப்பினருக்குமே பாதிப்பு என்பதை எடுத்துணர்த்தியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எமது கடற்றொழில் சார்ந்த சமூகத்தின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, எமது மக்களுக்கு சாதகமாகவே ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இப்போது, அத்துமீறும் இந்தியக் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களது படகுகள் மற்றும் உபகரணங்கள் இங்கே தடுத்து வைக்கப்படுகின்றன.
இது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவைப் பாதிக்கும் என்றாலும் எமது மக்களின் நலன்கருதி, எனது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அந்தவகையில் ஜனாதிபதி அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது சுயலாபம் கருதிய அரசியல் பரப்புரைகளையே மேற்கொண்டுள்ளனர்.
இது டக்ளஸ் தேவானந்தாவின் பிரச்சினை என எமது கடற்றொழிலாளர்களது பிரச்சினையை அவர்கள் இந்தியாவுக்குக் காட்ட முயற்சிக்கின்றனர். இலங்கையில் இப்பிரச்சினை பற்றி அவர்கள் மூச்சு விடுவதே இல்லை. இது அவர்களது அரசியல்.
அந்தவகையில் எமது வரலாற்று ரீதியிலான மீன்பிடித் துறைமுகங்களை மீண்டும் பாவனைக்கு எடுப்பது தொடர்பில் நான் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றேன் அது வெற்றியளிக்கும் வகையில் உள்ளது.
அந்தவகையில் மயிலிட்டி பருத்தித்துறை உட்பட எமது மீன்பிடித்துறைமுகங்களை மீளப் பெறவும், அதேநேரம் பலநாள் களங்கள் தொழில் சார்ந்து அதனை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் புதிய மீன்பிடித்துறைமுகங்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
இப்பகுதி கடற்றொழிலாளர் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றம் குறித்து எனக்கு மிகுந்த அக்கறை உண்டு. அந்த வகையில் இச் சமூகத்தின் ஒளிமயமான எதிர்காலம் தொடர்பில் தொடர்ந்து உழைப்பேன் என்றும் தெரிவித்தார்.

























No Comment to " வரலாற்று ரீதியிலான மீன்பிடித் துறைமுகங்களை மீட்டுத் தருவேன் - அமைச்சர் "