மசகு எண்ணைக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் நானொன்றுக்கு 30 இலட்சம் ரூபா நட்டம்

நாட்டிற்குள் மசகு எண்ணையை கொண்டு வருவதற்காக கடலில் காணப்படும் குழாயொன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்புக் காரணமாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நாளொன்றுக்கு 30 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மறுசீரமைப்பு பணிகள் உரிய தரத்தில் முன்னெடுக்கப்படாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் கடந்த மூன்று வாரக் காலமாக இந்நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தலைவர் அசோக ரங்வல இவ்விடயம் குறித்து குறிப்பிடுகையில்,
புதிய குழாயில் ஏற்பட்டுள்ள ஒழுக்கினால் உரிய வகையில் மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள முடியாமையால் ஒரு நாளைக்கு 25ஆயிரம் தொடக்கம் 30ஆயிரம் டொலர்கள் வரையில் நட்டம் ஏற்படுகின்றது.
இதன் இலங்கை பெறுமதி 30இலட்சம் ரூபாவாகும். 10 வருடங்கள் பயன்டுத்தக் கூடிய வகையிலேயே இந்த குழாய்கள் காணப்படும். ஆனால் ஓரிரு மாதங்களில் இந்த குழாய்கள் உடைந்து விடுவதால் பாரியளவில் நட்டம் ஏற்படுகின்றது என்றார்.
மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவிக்கையில்,
குழாயினை பொறுத்திய பின்னர் ஓரிரு மாதங்களில் அவை உடைந்து விடுகின்றன. இதற்கான காரணத்தை இன்னும் நாங்கள் அறிய வில்லை. ஏனெனில் இது குறித்து ஆராய வேண்டும். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. ஆனால், எம்மால் கடலுக்கு செல்ல முடியாமலுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த நிலைமை சீராகிவிடும்.
புதிய குழுாய் ஒன்றை அமைப்பதற்கான, ஆய்வுப்பணிகளுக்காக மலேஷிய நிறுவனம் ஒன்றுக்கு 3இலட்சத்து 64ஆயிரம் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தலைவர் அஷோக ரங்வெல தெரிவித்த தெரிவிக்கையில்,
பத்தாண்டு காலத்திற்காக குழாய் ஒன்றை மாற்றியமைப்பதே தேவைப்படுகின்றது. இதனை செய்யாது, வேறு வேலைகளை செய்கின்றனர். இதன் காரணமாக வீண் விரயங்கள் அதிகரித்துள்ளன.
நட்டத்தில் இயங்கும் நிறுவனம் என்ற வகையில்,இவ்வாறான வீண் விரயங்களை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறைப்பதனால் நீண்ட நாட்களுக்கு இயங்க முடியும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வா தெரிவிக்கையில்,
காணப்படும் குறைபாடுகளை அவர்கள் எமக்கு அறிவித்துள்ளனர். இவற்றை நாம் திருத்த வேண்டியுள்ளது.
அவ்வாறு இல்லையென்றால், தொடர்ந்தும் பழுதடைந்தே இருக்கும். இந்த குழாய் 27 வருடங்கள் பழமை வாய்ந்தவை. பொதுவாக இவ்வாறான குழாயின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும். இதனை மாற்ற வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என்ற யோசனையை யாரும் முன்வைக்கவில்லை. இவ்வாறான குழாயை தயாரிக்கும் ஓரிரு நிறுவனங்கள் மாத்திரமே உலகில் உள்ளன. அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம் என்றார்.

























No Comment to " மசகு எண்ணைக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினால் நானொன்றுக்கு 30 இலட்சம் ரூபா நட்டம் "