எமது பயணமே நிச்சயம் வெல்லும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சரியான திசை வழியில் அர்ப்பணிப்புடன் நாம் செல்லும் பாதையே சாத்தியமான வழிமுறையாகும். இவ்வழிமுறையே வெற்றி கொள்ளும் என்பது நிச்சயம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மானிப்பாய் இந்துக்கல்லூரி வளாகத்தில் புதிய மகிந்தோதயம் தொழில்நுட்ப பீடக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் திரு.சிவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், கடந்த கால தவறான அரசியல் முன்னெடுப்புக்கள் பாரிய அழிவுகளையும், இழப்புக்களையும், துன்பங்களையும் எமக்கு தந்துள்ளன.
இந்நிலையை நாம் மீண்டும் உருவாக்கி விடக் கூடாது என்பதில் கவனமாக செயற்பட வேண்டும்.
நாம் செல்லும் பாதை நேரிய பாதையாகும். பல்வேறு அர்ப்பணிப்புக்கள், தியாகங்களுக்கு மத்தியில் நாம் தொடர்ந்தும் நடைமுறைச் சாத்தியமான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
இப்பயணமே நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. எமது இந்த நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை அன்று எதிர்த்தவர்கள் இன்று அதே வழிக்கு வந்துள்ளதை நீங்களே கண்கூடாகக் காண்கிறீர்கள் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
30 மில்லியன் ரூபா செலவில் இப் புதிய கட்டிடம் மத்திய கல்வி அமைச்சின் ஊடாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறானதொரு வசதியை மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு வழங்கியமைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்கள் சார்பாக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

























No Comment to " எமது பயணமே நிச்சயம் வெல்லும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "