மக்களுக்கு பணி செய்யாத சபைகளை பணி செய்யுமாறு வலியுறுத்த மக்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண சபைகள் என்பன வெறும் பதவிகளை அலங்கரித்துக்கொண்டிருப்பதற்கான அலங்கார சபைகள் அல்ல. அவை மக்களுக்கான பணிகளை ஆற்ற வேண்டிய அதி முக்கிய கட்டமைப்புக்கள். மத்திய அரசாங்கம் உரிய பணிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுவரும் நிலையில், அப்பணிகளை மேற்படி சபைகளின் மூலம் மேற்கொள்ளப்படாமல், முடக்கப்படும்போது மக்கள் முன்வந்து அப்பணிகளைச் செய்விக்க வலியுறுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அமைச்சர் அவர்களது யாழ்.அலுவலகத்தில் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வு இடம்பெற்ற போதே அமைச்சர் அவர்கள் மேற்படி தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, தென்பகுதியிலே உள்ளுராட்சி சபைகள் சிறந்த முறையில் மக்கள் நலன்சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
கொழும்பு மாநகர சபை ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகத்தில் இருக்கின்ற நிலையிலும், இணக்க அரசியலின் மூலம் அதனது பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், எமது பகுதிகளில் அநேகமான உள்ளுராட்சி சபைகளையும், வடக்கு மாகாண சபையையும் தம்வசம் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சபைகளின் செயற்பாடுகளை முடக்கி வைத்துவிட்டு வெறும் பதவிகளை மட்டும் வகித்துக் கொண்டு வெற்று அறிக்கைகளை விடுத்தும் வீர கோஷங்களை எழுப்பியும் தங்களது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.
எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர்கள், மக்களது பிரச்சினைகள் தீர்ந்துவிட்டால் தங்களுக்கு அரசியல் இருப்பு இல்லையென்பதை உணர்ந்து செயற்படுகின்றனர்.
மக்கள் நலன்சார்ந்த பணிகளை இவர்கள் செய்வதுமில்லை, செய்கின்றவர்களை செய்ய விடுவதுமில்லை. இது எமது மக்களின் துரதிஷ்டமாகும்.
இன்று இங்கே வருகைதந்திருக்கின்ற மக்கள் பலரது பிரச்சினைகள் உள்ளுராட்சி சபைகளின் மூலமும், மாகாண சபையின் மூலமும் தீர்க்கப்பட வேண்டியவை. அச் சபைகளால் இப்பிரச்சினைகள் தீர்கப்படாததையே இம் மக்களின் வருகை புலப்படுத்துகின்றது.
எனவே மக்கள் முன்வந்து தங்களது பணிகளைச் செய்விக்க இச்சபைகளை வலியுறுத்த வேண்டுமெனவும், எமது மக்கள் இவர்களை இனங்கண்டு எதிர்காலத்தில் சரியான திசை வழி நோக்கிப் பயணிக்க முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுவானதும் தனிப்பட்டதுமான பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இவற்றுள் பல கோரிக்கைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




























No Comment to " மக்களுக்கு பணி செய்யாத சபைகளை பணி செய்யுமாறு வலியுறுத்த மக்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "