இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் இடைவிடாமல் தொடர்கிறது எனவும் கைது செய்யப்பட்டுள்ள 82 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 7ஆம் திகதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 82 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 18 விசைப்படகுகளையும் இலங்கை படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரலால் படும் துயரங்கள் சொல்லி மாளாது. கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 600 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அதற்கு காரணமான இலங்கை படை மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் தான் தமிழக மீனவர்களுக்கு எவ்வளவு தீமை செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற துணிச்சலில் இலங்கைப் படையினர் தங்களின் அட்டகாசங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, எந்த தவறும் செய்யாத தமிழக மீனவர்கள் 82 பேரை ஒரே இரவில் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றிருக்கின்றனர்.
இந்தியாவிலேயே அண்டை நாடுகளால் மீனவர்கள் கைது செய்யப்படும் கொடுமையை அனுபவித்து வரும் மாநிலங்கள் தமிழ்நாடும், குஜராத்தும் தான்.
குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் அந்த மீனவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்பதை அம்மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் தாம் அறிந்திருப்பதாகவும், அதேபோல் இலங்கைப் படையினரால் தமிழக மீனவர்கள் படும் துயரத்தை அறிய முடிவதாகவும், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்படும் என்றும் தமிழகத்தில் பரப்புரைக் கூட்டங்களில் பேசும்போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இலங்கைப் படையினரின் கொட்டம் அடக்கப்படும் என்று மீனவர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், ஒருபுறம் இந்தியாவுடன் நல்லுறவை பேணுவதைப் போல நாடகமாடும் இலங்கை அரசு, இன்னொரு புறம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து கடந்த 10 நாட்களில் 4 முறை மட்டுமே தமிழக மீனவர்கள் வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இதில் இரு முறை தமிழக மீனவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்; 3 முறை தாக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்வதைப் போல இலங்கை அரசு நாடகமாடினாலும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வைத்துக் கொண்டு திரும்பித் தர மறுப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு களைத்து விட்ட தமிழக மீனவர்கள் தற்போது நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசைத் தான் மலைபோல நம்பியிருக்கிறார்கள். இலங்கை அரசைக் கடுமையாக எச்சரிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மட்டுமே முடியும் என்பது தமிழகத்தின் நம்பிக்கை ஆகும்.
எனவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 82 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளது.

























No Comment to " இந்திய மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் "