வடக்கில் மெட்டல் டிடெட்டர் மூலம் தங்கப்புதையல் தேடிய தென்னிலங்கை வாசிகள் இருவர் ஓமந்தையில் கைது!
யுத்தத்தின் போது புதைக்கப்பட்டவை எனக் கருதப்படும் தங்கத்தை, 'மெட்டல் டிடெக்டர்' கருவியைப் பயன்படுத்தித் தேடியவர்கள் என்று கருதப்படும் இருவரை ஓமந்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி கருவி அரச நிறுவனம் ஒன்றில் இருந்து கொள்ளையிடப்பட்டதா என்பது குறித்தும் புலனாய்வு நடைபெறுவதாக இவ்விடயத்தை விசாரித்து வரும் ஒரு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியிருக்கின்றார். உரிய அனுமதிப்பத்திரம் ஏதுமின்றி சந்தேக நபர்களிடம் இந்தக் கருவி சிக்கியது எங்ஙனம் என்பது குறித்தும் விசாரிக்கப்படுகின்றது.
மேற்படி தங்கப் புதையல்கள் மறைந்து கிடக்கும் இடங்கள் எனக் கருதப்படும் பகுதிகளின் படங்கள், கைதாகியுள்ள சந்தேகநபர்களின் 'மொபைல் போன்' பதிவுகளில் உள்ளன என்றும் கூறப்பட்டது. மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் கடவத்தை மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஓமந்தை மற்றும் வன்னியின் காட்டுப்பகுதிகளுக்குக் கூட்டி வந்தவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் முயன்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், மேற்படி காட்டுப்பகுதியை ஆராய்ந்து, துருவி வந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சில தனியாட்களும் இவ்விடயத்தில் சம்பந்தப்படுகின்றனர் எனக் கருதும் பொலிஸார் அவர்களையும் தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் பயணித்த வாகனத்தைத் தடுத்து வைத்துள்ள பொலிஸார் அவர்களின் 'மொபைல்' தொலைபேசிக்கு வந்த மற்றும் அதன் மூலம் அழைப்பு எடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களைப் பெற்று விசாரிப்பதற்கு நீதிமன்ற அனுமதியைக் கோரியிருக்கின்றனர் என்றும் கூறப்பட்டது. சந்தேக நபர்கள் இருவரும் வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.


























No Comment to " வடக்கில் மெட்டல் டிடெட்டர் மூலம் தங்கப்புதையல் தேடிய தென்னிலங்கை வாசிகள் இருவர் ஓமந்தையில் கைது! "