'செய்தியாளர் பயிலரங்கை திட்டமிட்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது'
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரையின் அடிப்படையில் புலனாய்வுச் செய்தியாக்கம் தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கைக் கிளை நடத்தியிருந்த நான்காவது பயிலரங்கே தடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மின்னேரியா என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இப்படியான பயிலரங்கின்போதும். அங்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பி, 'பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கான கருத்தரங்கே' நடத்தப்படுவதாகக் கூறி அதனைத் தடுத்திருந்தனர்.இரண்டாவது தடவையாக இந்தப் பயிலரங்கு இன்று தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அந்த ஹோட்டல் நிர்வாகமும் பொலிசாரும் அந்தப்பயிலரங்கை நடத்துவதற்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி அதனை நிறுத்தச் செய்திருந்தனர்.
இதனையடுத்து இன்றைய இந்தப் பயிலரங்கு வெள்ளியன்று நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயிலரங்கை நடத்தியவர்கள் தேசத் துரோகிகளாகச் செயற்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் திடீரென உணர்ச்சி வசப்பட்ட ஒரு கூட்டத்தினரால் நடத்தப்படவில்லை என்றும், நன்கு திட்டமிட்ட வகையிலேயே நடத்தப்பட்டுள்ளது என்றும் பயிலரங்கில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
'டிஜிட்டல் முறையில் அச்சுப்பதித்த பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் அவர்கள் தாங்கியிருந்தார்கள். அவற்றில் எங்களுடைய படங்களும் அச்சிடப்பட்டிருந்தன. இதனால் இந்த ஆர்ப்பாட்டம் முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர்களாலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் எங்களிடம் கூறினார்கள்' என்று ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் ஷாண் விஜேதுங்க தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த நீர்கொழும்பு காவல்துறையினர், இரு தரப்பினருடனும் பேச்சுக்கள் நடத்தியதாகத் தெரிவித்த காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண, 'ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் மோதல்களோ கைகலப்போ எதுவும் ஏற்படவில்லை என்றும் ஊடகவியலாளர்களுக்குஅவசியமான பாதுகாப்பை வழங்குமாறு நாங்கள் நீர்கொழும்பு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருக்கின்றோம்' எனக் கூறினார்.


























No Comment to " 'செய்தியாளர் பயிலரங்கை திட்டமிட்ட கும்பல் ஒன்று தடுத்து நிறுத்தியது' "