திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் மூவர் உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு)
திருச்சி சிறப்பு முகாமில் மூன்று ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவரூபன் (வயது 27), கேதீஸ்வரன் ( வயது 33), புருசோத்தமன் ( வயது 29) ஆகிய மூவருமே இப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களாவர்.
தேவரூபன் என்பவர், சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதம் இருககின்ற நிலையில் புருசோத்தமன் ,கேதீஸ்வரன் ஆகிய இருவரும் தங்களை விடுதலை செய்து தங்களது குடும்பங்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து உண்ணாநிலை போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.
இவர்கள் மூவரும் கடல்வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதாகி கடந்த ஒரு வருடமாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் குடும்பத்தினர் திறந்தவெளி முகாம்களில் வசிக்கின்றார்கள். தினக்கூலி வேலைகளுக்கு சென்றே இவர்கள் தங்களது குடும்பங்களை பார்த்து வந்தார்கள். தற்போது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தங்களின் குடும்பங்கள் இவ்வாறு வாழ வழியின்றி இருப்பதனாலேயே விடுதலையை வலியுறுத்தி உண்ணாநிலை போராட்டத்தினை நடத்துவதாக உண்ணாவிரதம் இருப்பவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதில் புருசோத்தமன் என்பவர் நான்கு வயதில் தமிழகத்துக்கு அகதியாக வந்தவர். இங்கேயே கல்வி கற்று தமிழக பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தவர். இவருக்கு சிறிய வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.
கேதீஸ் என்பவர் கடந்த எட்டு வருடங்களாக திறந்தவெளி முகாமில் வாழ்ந்து வந்தவர். இரண்டு சிறிய வயது குழந்தைகளுடன் குடும்பத்தினர் மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
தேவரூபன் என்பவர் கடந்த ஏழு வருடங்களாக திறந்தவெளி முகாமில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தவர். சிறிய வயது குழந்தை ஒன்றுடன் குடும்பத்தினர் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் இந்த உண்ணாநிலை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் படி தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் வேண்டி நிற்பதாகவும் இவாகள் தெரிவித்துள்ளனர்.




























No Comment to " திருச்சி சிறப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் மூவர் உண்ணாவிரதம் (படங்கள் இணைப்பு) "