விக்னேஸ்வரன் தன்னை வந்து சந்தித்தால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன்! - என்கிறார் அமைச்சர் பசில்
வட மாகாண சபையின் முதலமைச்சர் என்னை சந்தித்தால் வடக்கு மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன். வடக்கு முதல்வர் அவரது மனச்சாட்சியின் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். அவர் என்னை விரைவில் சந்திப்பார் என நம்புகின்றேன் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்-
வட மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னர் வடக்கை மீள கட்டியெழுப்புவதற்கான வடக்கு செயலணி கலைக்கப்பட்டது. ஆனால் கடந்த எட்டு மாதங்களாக வடக்கில் மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றப்படவில்லை. மாகாண சபைக்கு வருமானங்களை பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு காணப்பட்டும் வடக்கு முதல்வர் அவற்றை செய்யாமல் இருக்கின்றார். முதலமைச்சர் தமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விடயங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கின்றாரே தவிர மக்களுக்கு சேவையாற்றும் எண்ணத்தில் செயற்படவில்லை.
எந்தவொரு மாகாணசபைக்கு வழங்காத 5000 மில்லியன் ரூபாவை மத்திய அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கியது. ஆனால் வடக்கு மாகாண நிர்வாகம் எதனையும் செய்யாமல் இருக்கின்றது. வடக்கில் தற்போதைய நிலைமையில் கல்வி, மின்சாரம், மீனவர் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயலிழந்து காணப்படுகின்றன. ரயில் பாதை நிர்மாணமும் வேகமிழந்து வருகின்றது. யுத்தம் முடிந்த பின்னர் மத்திய அரசாங்கம் வடக்கு மாகாணத்தை பாரிய அளவில் முன்னேற்றியது. ஆனால் கடந்த எட்டு மாதங்களாக நிலைமை மாறிவிட்டது. இராணுவத்தை அகற்றுங்கள் என்று கூறுவதனை விட வேறு எதனையும் வடக்கு முதலமைச்சர் செய்வதில்லை.
வடக்கு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். வடக்கு மக்கள் எ்ஙகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதனையும் செய்யவில்லை. எனவே வட மாகாண சபையின் முதலமைச்சர் என்னை சந்தித்தால் வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன். வடக்கு முதல்வர் அவரது மனச்சாட்சியின் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். ஆனால் அவர் என்னை சந்திக்காமல் இருந்து வருகின்றார்.
வடக்கு மக்களுக்கு அதிகமான தேவைகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற வேண்டும். ஆனால் அந்த விடயத்தில் அரசியல் அனுபவங்கள் வடக்கு முதல்வரிடம் இல்லாமல் இருக்கலாம். அதற்கு உதவி செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதாவது வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவது என்ற அடிப்படையில் முதலமைச்சருக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
நானும் வடக்கு முதலமைச்சரும் சந்திப்பதால் தனிப்பட்ட முறையில் எங்கள் இருவருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. எங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. ஆனால் வடக்கு மககளுக்கு சேவையாற்ற முடியும். வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதாக கூறியே அவர் பதவிக்கு வந்துள்ளார். எனவே அந்த மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அவசியமாகும். இதன் பின்னணியில் வடக்கு முதலமைச்சர் விரைவில் என்னை சந்திப்பார் என நம்புகின்றேன்.
வடக்கு மாகாண சபை அபிவிருத்தி செயற்பாட்டில் கடந்த எட்டு மாதங்களாக தோல்வியடைந்துவிட்டது. அவ்வாறு முழுமையாக செயலிழந்துவிட்டால் அந்த பழியை அரசாங்கத்தின் மீது சுமத்துவதே சிலரின் நோக்கமாகவுள்ளது. எனவே தயவு செய்து எம்முடன் புரிந்துணர்வுடன் வேலை செய்யுங்கள் என்று வடக்கு முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். வடக்கு மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் என்னை சந்திக்குமாறே கேட்கின்றேன். யுத்தம் முடிவடைந்து 180 நாட்களில் அரசாங்கம் பல்வேறு முன்னேற்றங்களை வடக்கில் ஏற்படுத்தியது. ஆனால் கடந்த எட்டு மாதங்களாக வடக்கு மாகாண சபை நிர்வாகம் எதனையும் செய்யாமல் இருக்கின்றது என்றார்.


























No Comment to " விக்னேஸ்வரன் தன்னை வந்து சந்தித்தால் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன்! - என்கிறார் அமைச்சர் பசில் "